Pages

RSS Feed

Monday, December 27, 2010

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் தலையிடவும் வேண்டாம்! எங்களைக் கொலையிடவும் வேண்டாம்! சீமான் தொடர் - பாகம் 04

''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...'' - ''நான் தமிழகத்து நடேசன் பேசுகிறேன்...'' எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.
வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ''தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே... அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்சினைகள் வருமா?'' - தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.
''நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்... பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!'' எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.
''வா... வா...'' என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. ''இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது...'' எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!
இதுபோல் ஒன்றா... இரண்டா... ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், 'நிச்சயம் வெல்வோம்!என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, 'சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!என உறுதியோடு சொன்ன குரல்கள்!
உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?
தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்... மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச்சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?   
''ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?'' - அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.
ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, 'இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்... தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது... ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?
மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே... இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே... ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்? 
'நாங்கள்தான் திரட்டவில்லை... நீ எங்கே போனாய்?’ என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர்களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும்,  பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.
இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, 'நாம் தமிழர்அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல... தொடரப்பட்டது. ஐயா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். 'என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக ஐயாவின் வழியில் பின்தொடர்கிறோம்.
ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர்களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.
ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க... தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, 'இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சயமாகத் தலையிடுவேன்!எனச் சொல்லி இருக்கிறாராம்.
வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்... 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்களா?
ராகுல் காந்தி அவர்களே.... நீங்கள் தலையிடவும் வேண்டாம்... எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.
தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றியவனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்? 
ராகுல்காந்தி அவர்களே... தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக்கிறீர்கள்... 'மது குடிப்பது தவறு’!
அப்படியானால்... இரத்தம் குடிப்பது?!
NANDRI : JUNIOR VIKATAN

Wednesday, December 22, 2010

உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது? - திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 03

உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது? - திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 03
[ புதன்கிழமை, 22 டிசெம்பர் 2010, 12:34.47 PM GMT +05:30 ]
'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று வேளைகளும் சாப்பாடு வந்தது தம்பிகளே!
ஆனால், எந்தத் திசையிலும் தடுப்பு இல்லாமல், கால் நீட்டி அமரக்கூட நிலம் இல்லாமல் மழை யிலும், குளிரிலும் தத்தளித்தபடி முள்வேலிக்குள் முடக்கப்பட்டுக்கிடக்கும் என் உறவுகளின் நிலையை ஒப்பிட்டால், என் சிறை வலி... ஒரு விஷயமே இல்லை
.
சிறையில் இருந்து மீள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தாங்க முடியாத துயரத்தில் தள்ளும் விதமான செய்தியை தம்பி ஒருவன் சொன்னான்.

இசைப் பிரியா கற்பழித்துக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பி இருக்கிறதாம் அண்ணா! நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம்!'' என்றான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சமாதானப் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் கொல்லப்பட்ட காட்சிகளும் ஒளிபரப்பாவதாக எனக்குச் சொல்லப்பட்டது.

மனதளவில் நான் சோர்ந்து சுருண்டு போனேன். அடுத்த இரண்டாவது நாளில்என் மீதான வழக்கு உடைக்கப்பட்டதாக தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் தகவல் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. வெளியே வரவே வெட்கமாக இருந்தது.

இசைப்பிரியா சீரழிக்கப்பட்டார்... ரமேஷ் கொல்லப்பட்டார்... என்பதெல்லாம் பலருக்கும் ஒரு செய்தியாகவே இருக்கும். ஆனால், எனக்கு அது என் வீட்டில் விழுந்த இழவுக்குச் சமம். என் மனக் கண்ணில் இசைப்பிரியா சிரிக்கிறாள்... ஈழத்தில் நான் இசைப்பிரியாவுடன் உரையாடிய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் வந்து போகின்றன.

இசைப்பிரியா... ஈழத்து உயிரோவியம். அவள் பேசுவதே கவிதை வாசிப்பதுபோல் இருக்கும். அழகுத் தமிழில் என்னை அவள் நேர்காணல் எடுத்த நிகழ்வு, ஏதோ இன்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது. புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சிக்காக இசைப் பிரியா கேள்வி கேட்க... நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, 'அண்ணா கிபீர் வரும் சத்தம்...’ என என்னை அடுத்த இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்னர், ஆசுவாச நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்டி தொடரும். நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் நின்று பேச முடியாது. எந்நேரமும் குண்டு விழும் என்கிற அபாயச் சூழலிலும், புன்னகை மாறாத முகத்தோடு இசைப்பிரியா, ஈழம் குறித்தும் தமிழகம் குறித்தும் நிறைய உரையாடினாள்.

ஈழப் போரின் இறுதிக்கட்ட நேரத்தில் யார் யாருக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதற்றத்தோடு நான் பட்டியலிட்டுப் பார்த்தவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். போர் முடிந்த சில மாதங்களில், 'பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப் பட்டதாக’ சில ஊடகங்கள் இசைப் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டன.

கொல்லப்பட்டது இசைப் பிரியாதான்... துவாரகா இல்லை!’ என அடுத்த சில நாட்களிலேயே வெளியான உண்மை, தடதடத்த தமிழ் இதயங்களை தைரியம் கொள்ளவைத்தது. ஆனால், அன்றைக்கும் இந்த சீமான் இருந்தது அழுகையோடுதான்!
சிறை வாசலில் திரண்ட கூட்டம்... ஆவேச முழக்கம்... ஆதரவுக் கரங்கள்... வழி நெடுக வரவேற்பு... இத்தனைக்கு மத்தியிலும் இசைப்பிரியாவின் துயரம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ரமேஷின் மரணமும்!

போராளிகளின் கட்டளைத் தளபதியாக இருந்த ரமேஷ், அங்கே பெருமரியாதையோடு பார்க்கப்பட்டவர். கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாய் சிங்களப் பிடியில் சிக்கிய அவருடைய கோலத்தை இணையதளத்தில் கண்டு சுக்குநூறாகிப் போனேன். கொன்றார்களா... வெறி பிடித்துத் தின்றார்களா என்றே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்களைக் கண்டித்து எழுதக்கூட என் கைகள் நடுங்குகின்றன.
ராஜபக்ஷவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நோர்வே நடத்தச் சொல்கிறது... கனடா கண்டிக்கிறது... லண்டன், ராஜபக்ஷவை வளைக்கிறது... சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது!

ஒரு குரல் இல்லை... ஒரு கூப்பாடு இல்லை... முதல் தமிழனாக அலறி இருக்க வேண்டிய எங்கள் தமிழினத் தலைவரோ, 'இளைஞன்’ திரைப்பட விழாவில் நமீதாவின் வணக்கத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். தன் மகளாக எண்ணக்கூடிய தளிர் ஒன்றை சிங்கள வல்லூறுகள் சிதைத்துப்போட்ட கோலத்தை எங்களின் தமிழினத் தலைவரிடம் எடுத்துச் சொல்லக்கூட இங்கே ஆள் இல்லை!

அப்படியே சொல்லி இருந்தாலும் என்ன செய்துவிடப் போகிறார்..? 'எடுங்கப்பா ஒரு கடுதாசியை...’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான்.

ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை! இருக்கட்டும், காலம் இப்படியே போய்விடாது. ஈழத்துக் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழினத் தலைவனின் பாராமுகத்துக்குப் பதில் தேடும் காலம் நெருங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இன்றைக்கு பத்திரிகைகளைப் புரட்டினாலே உங்களின் குடும்ப பராக்கிரமங்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. மகனை, மகள் திட்டுகிறார். மகளை, பேரன் திட்டுகிறார். இருவரும் உங்களையே 'இயலாதவராக’ விமர்சிக்கிறார்கள். எல்லோருடைய உரையாடல் பதிவுகளும் வெளியாகி, தமிழினத் தலைவராகிய உங்களைத் தத்தளிக்க வைக்கின்றன. அங்கே... இங்கே... என அத்தனை இடங்களிலும் சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை, அடுத்தபடியாக உங்களின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நுழைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். இத்தனை வயதில், 'பதவிகள் நிலைக்குமா... கூட்டணி நீடிக்குமா?’ என ஒவ்வொரு நிமிடமும் உறக்கம் இன்றித் தவிக்கிறீர்களாமே?

உலகத் தமிழர்களின் கண்ணீர்தான் உங்களின் நிம்மதியைக் காவு வாங்கி இருக்கும் என்பது என் அழுத்தமான அனுமானம். இலவசத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு அரிசி என மக்களை சோம்பேறிகளாக்கி, அதைவைத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த நீங்கள்... இன்னும் சில இலவசத் திட்டங்களுக்கு புத்தியைத் தீட்டிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால், வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.

போரை வழிநடத்துவதே இந்திய இராணுவம்தான்!’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக - நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே... இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக - பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே... அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம்? பதவியை இழந்ததற்கே இப்படிப் பதறுகிறீர்களே... உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது?

இது ஆரம்பம்தான்... நீங்கள் எதற்காக ஈழத் துயரத்தைக் கண்டிக்காமல் கை கட்டி, வாய் பொத்தி, 'ஆமாம் சாமி’யாக இருந்தீர்களோ... அவை அத்தனையும் காங்கிரஸின் இக்கட்டுகளால் உங்களின் கைகளைவிட்டுப் போகும் பாருங்கள். கோபமாக இதனை நான் சொல்லவில்லை. உங்களின் பாராமுகத்தால் பலியான ஆயிரமாயிரம் உயிர்களின் சாபமாகச் சொல்கிறேன்!

ராஜ தந்திரங்களின் தகப்பனாக - சாதுர்யச் சிறுத்தையாக - அரசியல் நெளிவுசுளிவுகளை ஆகக் கற்றவராக வலம் வந்த நீங்கள், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் நிலை குலைந்தவராக - நிம்மதி இழந்தவராக - நெருக்கடி சூழ்ந்தவராக இருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன்... தமிழினத்தின் வீரத்தை உலகத்துக்கே பறைசாற்றி புலித் தலைவனாய் தீரம் காட்டிய பிரபாகரன் எங்கே... ஊழலில் எப்படி சாதனை படைப்பது என உலகையே திகைக்கவைத்துப் பழித் தலைவனாய் பட்டம் வாங்கி இருக்கும் நீங்கள் எங்கே..?!

NANDRI: JUNIOR VIKATAN

Sunday, December 19, 2010

கடற்புலி சூசையின் கடைசி குரல்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 02


கடற்புலி சூசையின் கடைசி குரல்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 02
[ ஞாயிற்றுக்கிழமை, 19 டிசெம்பர் 2010, 12:57.42 PM GMT +05:30 ]
கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும்  நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு.
அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!
''பேச்சும் ஒரு இராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், இராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். இராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே இராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... 'இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த புலித் தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்கவைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்...!
ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார். அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன்போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்ஷவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?


ஏன் இந்த அவசர அறிவிப்பு...

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!
திருப்பி அடிப்பேன்....

nandri : JUNIOR VIKAN

Wednesday, December 15, 2010

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 01

'எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.
தொடரின் முதலாவது பாகம்:
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''



- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?


என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.


இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!


சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.


சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!
அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!


ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?


ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?


ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?


150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?


அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?


ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!


கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?


சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.
எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...
''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''
ஓயாது அலை..........
நன்றி: ஜூனியர் விகடன்