Pages

RSS Feed

Wednesday, January 19, 2011

திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 11

திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 11
[ புதன்கிழமை, 19 சனவரி 2011, 01:50.20 PM GMT +05:30 ]
மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக் கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த அரசாங்​கத்தின் செவிகளை அறையவில்லை.
இதுவரை 537 மீனவர்கள் சிங்களத் தாக்குதல்களால் செத்து மிதந்​திருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நம் இந்திய அரசு சொல்கிறது, 'இலங்கை நம் நட்பு நாடு’ என்று! பகை நாடாகச் சொல்லப்படும் பாகிஸ்தான்கூட எல்லைமீறும் இந்திய மீனவர்களை இதுவரைத் தாக்கி​யது இல்லை!

கடற்பரப்பில் எல்லையை நிர்மாணிப்பது கடினம். தெரியாமல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்வார்கள். எச்சரித்து அனுப்புவார்கள். கடற்பரப்பு கொண்ட அத்தனை நாடுகளும் அனுசரிக்கும் நியதி இதுதான். ஆனால், கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது! நடுக்கடலில் நம் தமிழ் மீனவர்கள் சிங்கள மீனவர்களால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உறவுகளே... திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? அப்பனை விட்டு மகனை நிர்வாணமாக்குவது, சூடு போடுவது, பச்சை மீன்களை வாயில் திணிப்பது, ஒவ்வாத உறவுகளுக்கு உட்படுத்துவது... இப்படிச் சிங்கள வெறியர்களால் நடுக்கடலில் நம் உறவுகளுக்கு நிகழும் உபத்திரவங்கள் ஒன்றா, இரண்டா?

இதில் எல்லாம் ஏற்படாத இனப்பகை, 'எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ எனச் சொன்னதில் ஏற்பட்டுவிட்டதா? என்னை முடக்க நினைப்பவர்கள், சிங்கள மூர்க்கர்களை அடக்கத் துணியாதது ஏன்? உலக வல்லமை படைத்த இந்தியக் கடற்படை திறமைகள் எல்லாம் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மட்டும் தடுமாறுவது ஏன்? எல்லை மீறும் சிங்கள மீன​வனை என்றைக்காவது இந்தியக் கடற்படை சுட்டிருக்கிறதா? தமிழ் மீன​வர்கள் தாக்கப்படும்போது, என்றைக்காவது குறுக்கே விழுந்து தடுத்திருக்கிறதா?
மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றபோது, எந்த நேரமும் போர் மூளும் என்கிற அளவுக்கு ஆக்ரோஷம் கொண்ட இந்திய அரசு, தவணை முறை​யில் தமிழர்கள் காவு வாங்கப்படும் துயரத்தை மட்டும் கண்டுகொள்வதில்லையே!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்வது எல்லை மீறிய பயங்கரவாதம் என்றால் சிங்களவன் செய்வதும் அத்தகைய அயோக்கியத்தனம்தானே! தனுஷ்கோடி வரை தமிழக மீனவர்களை விரட்டிவந்து வேட்டையாடும் சிங்களக் கடற்படையை வேடிக்கை பார்க்கத்தான் எங்கள் கடற்படை கடலில் நிற்கிறதா? இந்தியக் கடற்​படைக் கப்பலில் பறக்கும் தேசியக் கொடிதானே எங்கள் மீனவன் படகிலும் பறக்கிறது. இந்தியக் கொடி கட்டிய படகு நொறுக்கப்படுவது இந்தியக் கடற்படைக்கு இழுக்கு இல்லையா?

சிங்கள மீனவர் ஒருவர், அவருடைய நண்பரைச் சந்திப்பதற்காக மதுரை சிறைக்கு வந்தார். முகச் சாயலை வைத்து சந்தேகத்தில் நம் காவல்துறை அவரை விசாரித்தது. அந்த சிங்கள மீனவரின் பதிலும் நடவடிக்கையும் சந்தேகத்தை மிகுதியாக்கவே ஒரு கட்டத்தில், சுட்டுக் கொன்றுவிட்டது நம் காவல்துறை. உடனடியாக அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நம் அரசு, நம் சார்பாகவே அந்த மீனவரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கியது.

60 வருடங்களாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துயரத்துக்கு உள்ளாக்கும் இலங்கை ராணுவம் என்றைக்காவது எங்களின் துயரத்துக்குப் பொறுப்பேற்று இருக்கிறதா? மீனவப் பாண்டியனை நாங்கள் சுடவில்லை என்று இப்போதும் மறுக்கிறது சிங்கள அரசு. நீங்கள் சுடவில்லை என்றால், எங்கள் மீனவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மடிகிறார்களா? இல்லை, உங்களுக்குக் கூட்டுப் பயிற்சி கொடுக்கும் எங்கள் இந்திய ராணுவமே எங்களைக் கொத்திக் குதறுகிறதா? எங்கள் இனத்தாரும் உள்துறை அமைச்சர் பெருமானுமாகிய ஐயா ப.சிதம்பரம், 'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதே இல்லை’ என்கிறாரே? இத்தனை மீனவர்களின் பிணங்களையும் பார்த்துவிட்டுப் பேசுகிற பேச்சா இது? உங்களின் உளவுக் கண்களுக்கு எங்கள் வீட்டு இழவு ஏனய்யா தெரியாமல் போய்விட்டது? 'கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது, கொடுத்ததுதான்’ என எஸ்.எம். கிருஷ்ணா சொல்கிறாரே.... கர்நாடக மீனவன் ஒருவன் சிங்கள அட்டூழியத்தால் செத்து மிதந்திருந்தால், எஸ்.எம்.கிருஷ்ணாவால் இப்படிச் சொல்லி இருக்க முடியுமா? சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிற நேரத்தில் இறந்ததாலோ என்னவோ எங்களின் முதல்வர், பாண்டியன் கொலைக்கு ரொம்பவே பதறி​விட்டார். அடுத்த கணமே 5 லட்சம் பண உதவி அறிவிப்பு வெளியானது. தமிழன் தலையில், இடி விழுந்தால்கூட தபால் மட்டுமே எழுதும் எங்கள் முதல்வரின் நடவடிக்கையில் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்! தபாலுக்கு பதிலாக பிரதமருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்.

ஆழ்ந்த அனுதாபமும் அவசரத் தந்தியும் கொடுத்​திருக்கும் முதல்​வர், அடுத்த​கட்ட முயற்சிகளையும் முன்​னெடுப்பதாகச் சொல்லி​யிருக்கிறார். தமிழர்​களே, தைரியமாக இருங்கள். பறிபோன பாண்டியனின் உயிரை அவர் பத்திரமாக மீட்டுத் தந்துவிடுவார்!

கடல் அளவுக்குக் கண்ணீரோடு போராடும் நம் மீனவச் சொந்தங்களை நினைக்கும்போதெல்லாம் ஈழத்துக்கு போய்வந்த நினைவுகளே என்னுள் ஏக்கத்தோடு எழும்புகின்றன. ஈழத்துக்குப் போய்த் தங்கிவிட்டு நம் மண்ணுக்குத் திரும்பவும் புலித் தம்பிகளோடு படகில் புறப்​பட்டேன். அப்போது தூரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நின்றுகொண்டிருந்தன. ''அங்கே பார்த்தீர்களா, அண்ணா? நம் கட்டுப்பாட்டுப் பரப்பில் நம் தமிழகச் சொந்தங்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கிறார்கள்!'' எனக் கை காட்டிச் சொன்னார்கள். பக்கத்தில் போனபோது என் முகம் அறிந்து நம் மீனவர்கள் கையை அசைத்து ஆரவாரிக்க,

''இவர்களின் படகிலேயே உங்களை அனுப்பி வைத்துவிடலாம். அரை மணி நேரத்தில், நீங்கள் தமிழகம் போய்விடுவீர்கள். ஆனாலும் அண்ணன் திட்டு​வார்!'' எனச் சொன்னார்கள் புலித் தம்பிகள். என் நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழிந்த நேரம் அது. தமிழக மீனவர்களுக்குப் புலிகளின் கடற்படை துணை நின்ற தருணங்களை நினைக்கிறபோதெல்லாம் சிங்களவனின் வெறியாட்டம் ரெட்டிப்பு வேதனையாய் என் நெஞ்சை அறுக்கிறது. தாய்த்தமிழ் உறவுகளாகத் தழுவிய அந்தச் சொந்தங்களைத்தான் பயங்கரவாதிகளாக நம் தேசம் பிரகடனப்படுத்தியது. பாசம் காட்டியவர்கள் பயங்கர​வாதிகள்! படுகொலை செய்பவர்கள் பாசக்காரர்கள்! இந்தியாவின் அணுகுமுறை என்னே! என்னே!

வியன்னாவில், ஒரு சீக்கியனின் தலைமுடியை அறுத்தமைக்காக சீக்கிய இனமே மொத்தமாக தெருவில் இறங்கிப் போராடியது. ஆனால், இங்கே எங்கள் தலையையே அறுத்த பின்னும் ஒருவனுமே போராட​வில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டபோது, மொத்த தேசமும் பொங்கி வெடித்​ததே! இந்திய மாணவனுக்கு கொடுக்கும் குரலை இந்திய மீனவனுக்கு கொடுக்க ஏனய்யா மறுக்கிறீர்கள்? எங்களின் மீனவன் கடலில் மிதக்கும்போது 'இந்திய மீன​வனின் சடலம்’ என்கிற அடையாளத்தைக்கூட இந்த அரசாங்கம் கொடுப்பது இல்லை. தமிழக மீனவனை இந்திய தேசத்தில் இருந்து தள்ளிவைக்கும் சட்டத்தை என்றைக்கு அய்யா பிறப்பித்​தீர்கள்?

இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எங்களின் முதல்வர் திருமகனார் 'மட்டற்ற மகிழ்ச்சியில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்’ என அறிவித்து, தமிழர் தலைவனாக தன் கடமையைச் செவ்வனே செய்கிறார். கொலையான பாண்டியனின் செந்நீரிலும் அவர் குடும்பத்துக் கண்ணீரிலும் எங்கே அய்யா தேடுவது 'மட்டற்ற மகிழ்ச்சியை?’ இதற்காகத்​தானடா 'தமிழா இன உணர்வு கொள்’ என்பதைத் தொண்டை வரள வலியுறுத்துகிறேன். 'கொல், கொல்’ எனக் குரூரம் காட்டுபவனை வெல்வதற்காகவாவது இன உணர்வு கொள்ளடா தமிழா!

இதைச் சொன்னாலும் மீண்டும் ஏவுவார்கள் சட்டத்தை. 'மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ என்றதற்காக என்னைத் தேசியப் பாது​காப்புச் சட்டத்தில் அடைத்த அறிவாளிகளே... 'சட்ட​மீறல்’ என சந்திக்கு இழுத்தவர்களே... 'அத்துமீறல்’ என அலறிய அரசியல் நுண்ணறிவாளர்களே! நான் அடிப்​பேன் என்றதில் குலைந்துபோன தேசியப் பாதுகாப்பு, சிங்களவன் அடித்ததில் குலையவில்லையா? என் பேச்சால் உருவான இனப்பகை சிங்களவனின் குண்டு வீச்சால் உருவாகவில்லையா?
அன்றைக்கு என் வார்த்தைகளை 'வரம்பு மீறல்’ என உரைத்த உத்தமர்களே! இப்போது சொல்லுங்கள்... நான் என்ன செய்ய?
திருப்பி அடிப்பேன் தொடரும்

தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கினார்கள் - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 10

தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கினார்கள் - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 10
[ ஞாயிற்றுக்கிழமை, 16 சனவரி 2011, 10:03.46 PM GMT +05:30 ]
காக்கைகள் மாநாட்டில் கண்டனத் தீர்மானம் பாரதியே... எப்படிப் பாடினாய் 'காக்கை குருவி எங்கள் சாதி’ என்று? எங்களில் ஒருவர் இறந்தால் ஊரே கூடி அழுவோம்...
காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே...
எப்படிப் பாடினாய்
'காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்...
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே...
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே...


- இது கவிதை அல்ல... ஒவ்வொரு தமிழனின் தலையிலும் காக்கைகள் இட்ட எச்சம்!

இன உணர்வும் மன உணர்வும் இற்றுப்போய்க்கிடப்பவர் களைப் பார்த்து காக்கைகள் காறித் துப்புவதில் தப்பு இல்லையே. இத்தனை மொழிகள் வாழும் என் தாய்த் திருநாட்டில் மலையாளத் தீவிரவாதி என எவனாவது மாட்டி இருக்கிறானா? ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா?  கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா? மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா? மொழிவாரியாய் வேறு எங்கேயும் இல்லாத தீவிரவாதிகள் 'தமிழ்த் தீவிரவாதிகளாக’ இந்தத் தாய் மண்ணில் மட்டும் தேடப்படுகிறார்களே... மொழிக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக இட்டுக்​கட்டும் துயரங்களை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா தோழர்களே?

தனித்த பெருமைகளைத் தடுப்பதற்காகவே 'இந்தியன்’ என்கிற கட்டுக்குள் எங்களைக் கட்டிய புத்திமான்களே... எங்கள் இனத் துயரத்துக்கு மலையாள மண் என்றைக்​காவது மனம் வருந்தி இருக்கிறதா? ஆந்திர தேசம் என்றைக்​காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா? கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா? என் மீது விழுந்த அடி எவனுக்குமே வலிக்கவில்லை. சக மனிதனாகக்கூட என் கவலை​யில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை  என்றால் எதற்கடா எங்களுக்கு இந்தியன் என்கிற அடையாளம்?

ஈழமே இறந்து கிடந்தபோதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்​காத தமிழகம், ஆந்திரத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தபோது, பக்கத்து மாநிலம் எனப் பதறி ஒரு நாள் அரசு விடு​முறையை அறிவித்ததே... அது தவறு என எந்தத் தமிழனாவது தடுத்தானா?

தமிழ்த் தேசிய உணர்வுக்குள் எங்களைத் தள்ளிவிட்டதே நீங்கள்தானே... மலேசியாவில் தமிழர்கள் துரத்தப்பட்டபோது, அங்கே இருந்த மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ வலிக்கவில்லை. காவிரிக்காக கருணை காட்டாதவர்கள் - முல்லை பெரியாறு விவகாரத்தில் முறுக்கிக்​ கொண்டு நிற்பவர்கள் - ஒகேனக்​கல் விவகாரத்தில் எங்களை ஒதுக்கி​வைப்ப​​வர்கள் - பாலாறு விவகாரத்தில் கோளாறு​கொள்பவர்கள் 'இந்தியர்’ என்கிற அடையாளத்தில் மட்டும் நம்மோடு இணைவது சாத்​தியமா தமிழர்களே? இதைச் சொன்னால் இன வெறி... இறையாண்மை மீறல்... தேசிய பாதுகாப்புக்குப் பங்கம்... தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம்!

மராட்டிய மண்ணில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்து ஒன்றைக் கடத்துகிறான். மராட்டியக் காவலர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். அடுத்த கணமே கட்சி வேறுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும், 'எங்கள் மாநிலத்​தானை எப்படிச் சுடலாம்?’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே... தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே... ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம்  தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா? நிதீஷ் குமாரும் லல்லுவும் கொதித்தால்... அது இன உணர்வு. நான் கொதித்தால் மட்டும் இன வெறியா?
எப்போதுமே காங்கிரஸின் எதிரி... அதோடு, பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே நிலையான கூட்டாகக் கொண்டவர் மராட்டிய மண்ணின் தலைவர் பால் தாக்கரே. குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தபோது, அவர் ஆதரித்தது காங்கிரஸ் வேட்பாளரைத்தான். காரணம், அம்மையார் பிரதீபா பாட்டீல் மராட்டிய மண்ணுக்குச் சொந்தக்காரர். 'மண்ணுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்’ என்று நினைத்த பால் தாக்கரே எங்கே... 'கூட்டணிக்குப் பிறகுதான் குடிமக்கள்’ என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே?

'எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்!’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, 'கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே... 'தமிழகத்தின் முதல்​வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா?’ என அந்தச்சாமி​யாரை யாருமே கேட்காதது ஏனய்யா? அடிப்பேன் என்றதற்காக என்னை அடைத்தவர்கள், வெட்டுவேன் என்றவரை விட்டுவிட்டார்களே... தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; யார் வேண்டுமானாலும் வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கிவிட்டதுதான் சொரணையைச் சுண்டும் துயரம்!

நாகசாகி நச்சு எங்களின் தலைமுறையைத் தாக்கியது. சோமாலியாவின் பசி எங்களின் வயிற்றை எரித்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எங்களை அலறவைத்தது. ஆப்கானின் துயரம் எங்களின் அடிமடியை நொறுக்கியது. ஈராக்கில் விழுந்த இழவு எங்களில் ஈரக்​குலையை நடுக்கியது. சதாம் உசேனின் தூக்குக் கயிறு எங்கள் குரல்வளையையும் இறுக்கியது. பெனாசிர் பூட்டோவின் முடிவு எங்களையும் பேதலிக்கவைத்தது. உடலில் எங்கே அடிபட்டாலும் கண் அழுவதைப்போல, இந்த உலகத்தில் எங்கே துயரம் நிகழ்ந்தாலும் என் மண் அழுதது. ஆனால், என் மண் அழுதபோது, அதற்காக உலகில் எவருடைய கண் அழுதது? எல்லாவற்றுக்காகவும் அழும் எங்களைப் பார்த்து, எதற்காகவும் அழாதவர்கள் 'இன வெறி’ என்கிறீர்களே... இது வரலாற்று வஞ்சனையாக இல்லையா?

பந்தங்களுக்காகப் பதறுவதையும், சொந்தங்​களுக்காகத் துடிப்பதையும் இன வெறி எனப் பரப்புகிறார்களே... இதில் இருக்கும் மறைமுக அடக்குமுறையை படித்த தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்களில் சிலரேகூட இணையதளத்தில் 'இன வெறி​யன்’ என எனக்கு அடையாளம் ஏவுகிறார்கள். இணையத்தில் 'சீமான்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடப்படும் விமர்சனங்களைப் படிக்கையில், சினம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வருகிறது.

பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவனிடம், 'உனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்​தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்களாம். 'தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்!’ எனச் சொன்னானாம் அவன். விஞ்ஞானம் என்னும் வரப் பிரசாதத்தை நம் இளைய தலைமுறையும் அப்படித்தான் பயன்படுத்துகிறது. வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!
அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை 'இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!
திருப்பி அடிப்பேன் - தொடரும்
ஜூனியர் விகடன்

Wednesday, January 12, 2011

தமிழனின் கழுத்து வெட்டப்படும் போதுகூட இந்த உலகம் துடிக்காமல் போனதுதான் துயரம். !-சீமான் - திருப்பி அடிப்பேன்! - தொடர் பாகம் 09

தமிழனின் கழுத்து வெட்டப்படும் போதுகூட இந்த உலகம் துடிக்காமல் போனதுதான் துயரம். !-சீமான் - திருப்பி அடிப்பேன்! - தொடர் பாகம் 09

 

எங்கள் தமிழனுக்கு இருக்கும் உலகளாவிய அறிவும் அன்பும் இந்த பூமியில் வேறு எவருக்கு இருக்கிறது? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எங்கள் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனாரை முந்திக்கொண்டு சமத்துவம் பேசியவர்கள் எவராவது இருக்கிறார்களா?

 

இன வெறியன் - என் போன்றவர்கள் மீது சுமத்தப்படும் பட்டம் இது. பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிவார்ந்த பெருமக்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்.

 

பெற்ற தாயைப் பத்து தடவை அம்மா என அழைத்தால்... அது பற்று. நூறு தடவை அழைத்தால் அது வெறி என்பார்களோ? அன்புக்கும் பற்றுக்கும் அளவுகோல் வைக்க முடியுமா?

 

தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு, தமிழர் தொன்மம், தமிழர் பெருமை எனத் தனித்த பெருமிதங்களைத் தமிழர்கள் தன்னகத்தே கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, 'திராவிட... திராவிட' எனத் திசையெங்கும் பரப்புகிறார்களே... என் பாட்டன் ராஜராஜ சோழன் கட்டிய பெருவு​​டையார் கோயிலை தமிழர் கட்டடக் கலை எனச் சொல்லாமல், திராவிடக் கட்டடக் கலை என்று விளிக்கிறார்களே... தமிழனின் தனித்​தன்மை​யைக் குலைத்துவிடத் துடிக்கும் இவர்கள் வெறியர்களா... இல்லை, அதைத் தட்டிக்​கேட்பவர்கள் வெறியர்களா?

 

'நான் தமிழன்' என்பது இன வெறி என்றால், 'நான் திராவிடன்', 'நான் இந்தியன்' என்பதெல்லாம் என்ன வெறிகள்?

 

எங்கள் தமிழனுக்கு இருக்கும் உலகளாவிய அறிவும் அன்பும் இந்த பூமியில் வேறு எவருக்கு இருக்கிறது? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எங்கள் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனாரை முந்திக்கொண்டு சமத்துவம் பேசியவர்கள் எவராவது இருக்கிறார்களா? வள்ளுவன், இளங்கோவடிகள், கம்பன், கணியன் பூங்குன்றன் எனப் பாடிய தமிழ்ப் பெருமகன்கள் எல்லாம் உலகம் உலகம் என்றே உரத்துப் பாடினார்கள். 'யாதும் ஊரே' என்றதாலேயே தமிழனுக்கு என ஓர் ஊர் இல்லாமல் போய்விட்டது. 'யாவரும் கேளிர்' என்றதாலேயே கை கொடுக்கக்கூட கதியற்றுப் போய்விட்டது. கியூபாவில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளுக்குக் கூலி கிடைக்காததை நினைத்துக் கதறியவன் தமிழன். ஆனால், தமிழனின் கழுத்து வெட்டப்படும் துயரத்​துக்குக்கூட இந்த உலகம் துடிக்காமல் போனதுதான் துயரம்.

 

மார்க்ஸ், ஏங்கல்ஸ், இங்கர்சால், கார்க்கி, ஸ்டாலின், மாவோ என உலகப் புரட்சியாளர்களை எல்லாம் உள்ளத்தில் ஏற்றிக்கொண்டவன் தமிழன். ஆனால், எங்களின் தோழர்கள் ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், ஆத்தி​கத்தின் தலையில் ஆணியடித்த ராமசாமி ஐயாவையும் கொண்டாட இந்த உலகில் எவரடா இருக்கிறீர்கள்?

 

மலையாளத்தின் ஓணம் பண்டிகைக்கும், ஆந்திரத்தின் யுகாதித் திருநாளுக்கும் தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், எங்களின் பொங்கல் திருநாளுக்கு வேறு எந்த மாநிலத்திலாவது விடுமுறை விடுகிறார்களா? குருநானக் பிறந்த நாளை எங்கள் தமிழகம் கொண்டாடுகிறது. ஆனால், உலகத்துக்கே பொதுமறை படைத்த எங்கள் பாட்டன் வள்ளுவனை வேறு எவராவது கொண்டாடு​கிறார்களா? இதை உரக்கச் சொன்னால், உள்ளே தள்ளக்கூடிய இன வெறியனாகிவிடுகிறான் சீமான்.

 

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளங்குருத்து வயதில் தூக்குக்கு கழுத்து கொடுத்த பகத்சிங், அகிம்சையால் ஆங்கிலேயனின் அடக்குமுறையையே அடக்கிக்காட்டிய அண்ணல் காந்தி என எத்தனை​யோ தலைவர்களின் பெயர்களை என் தாய்த் தமிழக உறவுகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி இருக்​கிறார்கள். ஆனால், எங்கள் மண்ணில் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீர நங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்​தேவன் உள்ளிட்ட சாலச்சிறந்த வீரப் பெருமகன்களின் பெயர்களை வடக்கத்திய மண்ணில் எந்த மனிதருக்காவது சூட்டி இருக்கிறார்களா?

 

நேரு தொடங்கி ராஜீவ் வரை வடக்கத்தியத் தலைவர்களின் பெயர்களைத் தங்கள் வாரிசு​களுக்குச் சூட்டி, 'எல்லோரும் நம் நாட்டுத் தலைவர்கள்' எனத் தமிழர்கள் தழுதழுக்கிறார்கள். நேரு, இந்திரா, ராகுல், சோனியா, பிரியங்கா என எங்கள் காங்கிரஸ் அபிமானிகள் தங்களின் தாய் வீட்டுச் சொந்தம்போல் உரிமை கொண்டாடி உறவுகளுக்குப் பெயர் வைக்கிறார்களே... ஒரு வடக்கத்திய காங்கிரஸ்காரனுக்காவது கக்கன் என்றோ, காமராஜர் என்றோ பெயர் வைக்கப்​பட்டு இருக்கிறதா? எங்கள் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களின் பெயர்கள் வடக்கத்திய மண்ணில் எங்கேனும் வாழ்​கிறதா? எங்களின் தியாகம்கூட உங்களின் பார்வையில் தீண்டத்தகாததாகப் போய்விட்டதே... எங்கள் பாட்டன்களின் பங்களிப்பு இல்லாமலா இந்த மாபெரும் தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தது? எங்களின் தாத்தாக்களைத் தள்ளிவைக்கும் உங்களிடம் எப்படி ஐயா எதிர்பார்க்க முடியும் எங்கள் இனத்துக்​கான சுதந்திரத்தை?

 

உச்சந்தலையில் இருப்பதற்காக காஷ்மீரைக் கட்டிக் காக்க லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறீர்கள்... இராணு​வத்தைக் குவிக்கிறீர்கள்... எத்தனை போர் வந்தாலும் காஷ்மீரின் எல்லையைக்கூட தொட்டுவிடக் கூடாது என்​பதில் எவ்வளவு உறுதியாக இருக்​கிறீர்கள்? ஆனால், எங்களின் மீனவர்கள் வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும் தக்க தளமாக விளங்கிய கச்சத் தீவை சிங்கள தேசத்துக்கு வலியப் போய் வழங்கி​னீர்களே... தலையில் இருந்தால் தாங்குவீர்கள்... காலுக்கு கீழே இருந்தால் கழற்றிவிடுவீர்களா? நீங்கள் கழற்றுவதற்கும் மாட்டு​வதற்கும் கச்சத் தீவு என்ன உங்களின் பழைய செருப்பா?

 

எங்கள் பாட்டன் ஆண்ட சொத்தை இத்தனை சீக்கிரமாக எடுத்துக் கொடுத்தீர்களே... மலை​யாளச் சேட்டன் வீட்டுச் சொத்தில் ஒரு துளியை எடுத்துக் கொடுக்க முடியுமா உங்களால்?

எந்த இனத்துக்கும் இல்லாத இந்தப் பரிதாபங்களைப் பட்டியல் போட்டால், இன வெறியன் எனப் பட்டம் கட்டிப் பாய்ச்சுகிறார்கள் சட்டத்தை...

 

சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் மலேசியக் கடற்பரப்பில் சுற்றி வளைக்கப்பட்டார்கள். கை கொடுத்து உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அகதி என்கிற அடிப்படையில்கூட உலகத்தின் பார்வை அந்தப் படகின் பக்கம் படவில்லை. தாகத்துக்குத் தண்ணீர்கூட இல்லாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் படகில் வந்த தமிழர்கள் மனிதக் கருவாடுகளாக மிதந்தபோதும், இந்த உலகம் உற்றுப்பார்க்கவில்லை.

 

அவர்களின் நிலையையும், அவர்கள் நின்ற நிலப்பரப்பையும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்​கள் தமிழர்களே... மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பரப்புகளை உள்ளடக்கிய கடாரத்தை எங்களின் சோழப் பெருவளத்தான் கட்டியாண்ட காலம் எல்லாம் நெஞ்சுக்குள் மோதுகிறது தமிழர்களே... முப்​பாட்​டன் ஆண்ட நிலத்தில், பேரப் பிள்ளைகள் பிச்சை கேட்டு நின்ற நிலையை, வேறு எந்த இனமாவது எதிர்கொண்டு இருக்கிறதா? 1000 ஆண்டு​கள் இடைவெளி என்பது எங்கள் இனத்தில் இந்த அளவுக்கு விளையாடிவிட்டதே... வாழ்ந்து கெட்டவர்​களாக எங்கள் தமிழினம் வீழ்ந்துகிடக்கிறதே... அகல நிலப்பரப்பை வென்றபோது எல்லாம் எங்கள் தமிழர்கள் அங்கே கொடி ஏற்றினார்களே தவிர, யாரையும் குடியேற்றவில்லை. இத்தனைத் துயரங்​களும் தமிழனின் பெருந்தன்மையால் நிகழ்ந்த பிழை​தானய்யா... வந்தவர்களை எல்லாம் வாழவைத்த தமிழினம் சொந்த இனத்தை இன்று வாடகைக்கு வைத்து​விட்டதே... இதைச் சொன்னால் நான் இன வெறியனா?

 

கருங்கல்பாளையம் பொதுக் கூட்டத்தில் இந்த ஆதங்கத்தைக் கொட்டியதற்காக, இறையாண்மை மீறல் எனச் சொல்லி என்னையும், அண்ணன் கொளத்தூர் மணியையும், பெ.மணியரசன் ஐயாவையும் கோவை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அறைக்குப் பக்கத்து அறையில்​​​தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அடைக்க​ப்​​பட்டு இருந்ததாகச் சொன்​னார்கள்.

 

அப்போது பெ.மணியரசன் ஐயா, ''இந்திய தேசிய விடுதலைக்காக நமது பாட்டன் பூட்டப்பட்டுக்கிடந்த அறைக்குப் பக்கத்து அறையில், தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாம் பூட்டப்பட்டு இருக்கிறோம். கால இடைவெளிதான் மாறி இருக்கிறதே தவிர, கம்பிகளின் அடக்குமுறை மாறவில்லை!'' என்றார்.

 

பசி, உறக்கத்தைப்​ போன்றது​தான் இன உணர்வும்... காக்கை, குருவிகளுக்கும் நாய், நரிகளுக்கும் இருக்கும் இன உணர்வு சீமானுக்கு இருந்தால் மட்டும் வெறியாகி​விடுகிறதா?

 

ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் செய்கிற அனைத்து நன்மைகளையும் ஆதரிப்பது பற்று... அவன் செய்யும் அனைத்துத் தீமைகளையும் ஆதரித்தால்... அது வெறி!'' - பெருமகனார் நபிகளின் வார்த்தைகளையே நானும் சொல்கிறேன்.

 

என் வார்த்தைகள் தீமைகளைத் திரும்பிக்கூடப் பார்த்தது இல்லை. நாதியற்ற இனத்தின் நன்மைக்காகவே நா தேயப் பேசுகிறேன். இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதை நான் மறுக்கப்போவது இல்லை.

 

பிண வெறியனையும், பண வெறியனையும் தலைவன் எனக் கொண்டாடும் உலகில், இனவெறியன் என நான் இடிந்துரைக்கப்படுவது எல்லா​விதத்​திலும் எனக்குப் பெருமையே!

 

திருப்பி அடிப்பேன் தொடரும்....

 

நன்றி: ஜூனியர் விகடன்

 

கண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகி விட்டதடா தம்பி நம் இனம் - சீமான் திருப்பி அடிப்பேன்! தொடர்- பாகம்-08

கண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகி விட்டதடா தம்பி நம் இனம் - சீமான் திருப்பி அடிப்பேன்! தொடர்- பாகம்-08

 

ஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் 'ஆணிவேர்' படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரம்... 'தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை எல்லோருக்கும் புரியவைக்க முடியும்!' என இயக்குநர் ஜோன் சொல்ல... அப்படி ஒரு தாயை அழைத்து வருகிறார்கள்.

 

சிங்கள இராணுவத்தின் கோரப்பசிக்கு தன் குழந்தைகளைப் பறிகொடுத்தவள் அந்தத் தாய்.

 

அம்மா, நீங்க அழுவதுபோல் படம் எடுக்க வேண்டும். குழந்தைகள் இறந்ததை மறக்கச் சொல்ல வேண்டிய நாங்களே, அதை நினைத்து உங்களை அழச் சொல்லும் சூழலில் இருக்கிறோம். உங்கள் கண்ணீர் இந்த உலகத்தை நிச்சயமாக உலுக்கும்!'' என விளக்கிச் சொல்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். அவர்கள் சொல்லச் சொல்ல... வெறித்துப்போய் பார்த்த அந்தத் தாய் ஒருகட்டத்தில் கதறத் தொடங்கினாள். ஆனால், அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை.

 

அழுது அழுது கண்ணீரே வத்திப்போச்சுப்பா... எத்தனை வருஷத்துக்குத்தான் எங்களால அழ முடியும்? நான் மட்டும் இல்லை... எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா... இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா..!'' என அவர் சொல்ல, மொத்தக் குழுவுக்கும் கண்ணீர் கோத்துக்கொண்டது.

 

கண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம்... 'பேசினால் குற்றம்... எழுதினால் எதிர்ப்பு...' என்கிற ஆட்சியில் நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற தயக்கம்தானடா தம்பி நம்மை முறுக்கேறவிடாமல் தடுக்கிறது. நம் இன விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் இன்றைக்கு நடக்கவில்லையே தவிர, தினந்தோறும் ஏராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இஸ்லாமிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்துக்கு, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு, நலிந்த தொழிலாளர்களுக்கு என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழர் தேசிய இன விடுதலை அடைந்தால்தான் இதர விடுதலைகளை நாம் அடைய முடியும் என்கிற அடிப்படை உண்மை நமக்குப் புரியவில்லை.

 

ஐந்து மகன்கள் வாழும் ஒரு குடும்பத்தின் சொத்து அடமானத்தில் இருக்கிறது. 'எனக்கு இவ்வளவு' என ஐந்து பேரும் அடித்துக் கொள்கிறார்கள். அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டால்தானே பங்குபோட முடியும் என்கிற உண்மை ஒருவருக்கும் புரியவில்லை. அதேபோல்தான் தமிழகத்தின் நிலையும்!

 

ஈழப் போர் இத்தனை துயரமான முடிவுக்கு வந்தபோதும் - முள்வேலி முகாமில் தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோதும் - ஆயிரக் கணக்கான போராளிகள் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா? இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், 'நம்மால் எதுவும் முடியும்!' என்கிற தன்மானப் பற்று உலர்ந்து போனதும்தான்!

 

ஈழப் போர் உக்கிரமாகி, இரத்தமும் சதையுமாக ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்தபோதும், 'முதல்வர் என்கிற பதவியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது!' என சப்பைக்கட்டு கட்டினார்களே... ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள்? இடையில், 'நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா?' என்கிற துப்பற்ற கேள்வி வேறு... 'நம்மால் செய்திருக்க முடியும்!' என்பதற்கான பட்டியலை இவர்கள் முன்னால் இப்போது வைக்கிறேன். துப்பற்ற கேள்வியைத் துப்பியவர்களால் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

 

சந்திரசேகரராவ் என்கிற ஒற்றைத் தலைவனின் உண்ணாவிரதம் ஆந்திராவையும் தாண்டி, இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலையில் ஆணி அடித்ததே... அவர் கிளப்பிய தனித் தெலங்கானா கோரிக்கையைத் தணிக்க முடியாமல் மத்திய - மாநில அரசுகள் ஸ்தம்பித்து நின்றனவே... மாநிலப் பிரிவுக்கே அந்த அளவுக்குப் போராடிய ஒரு தலைவனைப் போல், இனத்தின் விடி வுக்குப் போராட இங்கே ஒரு தலைவனும் இல்லையா?

 

ஈழத்துப் போரின் இன்னல் பொறுக்காமல் துடித்து வெடித்த இந்தத் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு துணையாக நிற்காதது வரலாற்றுத் துயரம். அவர்களே இனத்தின் போராட்டத்துக்கு வினையாக நின்றது வரலாற்றுத் துரோகம்!

 

ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்கள் பொங்கி வெடித்தபோது, 'மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியவர்கள் நாங்கள். இனியும் தாமதித்தால் தமிழகத்தின் போராட்டங்கள் பன்மடங்காகப் பெருக்கெடுக்கும். அதனால், உடனடியாகப் போரைத் தடுத்து நிறுத்துங்கள்!' என காங்கிரஸ் அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் சரி, இருக்கைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என நினைத்தது தி.மு.க. அரசு.

 

'எங்களால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள்? தம்பி முத்துக்குமார் தொடர்ந்த இரத்த உறவுகள் உடலையே தீக்குச்சியாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள்? முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறி வித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன?

 

முத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்னை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக? கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக? ஈழம் குறித்த செய்திகளோ படங்களோ எதிலும் வந்துவிடாதபடி தடுத்து ஊடக சர்வாதிகாரம் செய்தது யாருடைய உறுதுணைக்காக?

 

'எங்களால் என்ன செய்ய முடியும்?' எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள்? 'நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்?' என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே... காங்கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும்! அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். 'இந்திய அரசு கவிழ்ந்தது ஏன்?' என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும்.

 

அன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்சினை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்னையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை... கண்முன்னாலேயே தொலைத்தீர்களே... அந்தத் துரோகம் யாரை அய்யா சேரும்? '

 

நானே அடிமை' என உதடு துடிக்கச் சொன்னீர்களே... ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி ஐயா நடந்தது? மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, 'என்னால் முடிந்தது இவ்வளவுதான்...

 

நான் ஈழப் பிரச்னைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன்!' என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே... ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம்? அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே... நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன்?

 

இனமானம் இழந்து - தன்மானம் தளர்ந்து இன்னமும் நீங்கள் பாடும் இயலாமைப் பாட்டைக் கேட்க நாங்கள் ஒன்றும் கிளிப்பேச்சு கேட்பவர்கள் அல்ல... புலிப்பேச்சு கேட்பவர்கள்!

 

திருப்பி அடிப்பேன்! தொடரும்,,,

 

Nandri www.vikatan.com

 

Thursday, January 6, 2011

தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்! -சீமான்! திருப்பி அடிப்பேன்! - பாகம் 07

தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்! -சீமான்! திருப்பி அடிப்பேன்! - பாகம் 07
ஈழத்து அக்கினியாய் இன முழக்கம் எழுப்பிய புதுவை இரத்தினதுரை இன்றைக்கு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. தகிக்கத் தகிக்கத் தமிழ்ப் பேசிய அந்தக் கவிஞனின் நிலையை அறியக்கூட இந்தத் தொப்புள்கொடி சொந்தத்துக்குத் துப்பில்லாமல் போய்விட்டது.

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா - வரிப்
புலிகள் எழுந்து புயலைக் கடந்து
போர்க்களம் ஆடுது தமிழா - இன்னும்
உயிரை நினைந்து உடலைச் சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா?

- ஈழத்து அக்னியாய் இன முழக்கம் எழுப்பிய புதுவை இரத்தினதுரை இன்றைக்கு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. தகிக்கத் தகிக்கத் தமிழ்ப் பேசிய அந்தக் கவிஞனின் நிலையை அறியக்கூட இந்தத் தொப்புள்கொடி சொந்தத்துக்குத் துப்பில்லாமல் போய்விட்டது.
வெறும் ஒன்றரைக் கோடிப் பேரை மட்டுமே கொண்ட சிங்கள இனம், 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களை வீழ்த்தி இருக்கிறது. இந்த வேதனை விசித்திரம் ஏன் நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கக்கூட எங்கள் தமிழர்களுக்கு நேரம் இல்லை!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு ராஜபக்ஷ உரையாற்ற வருகிறார் என்பது தெரிந்து, கொட்டும் பனியில் 20 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் இரண்டு மணி நேரத்துக்குள் கூடினார்களே... காமன்வெல்த் விழாவுக்கு ராஜபக்ஷ வந்தபோது நம்மில் ஏனய்யா அப்படி ஒரு கூட்டம் கூடவில்லை? தமிழகத் தமிழனின் உணர்வுகள் இந்த அளவுக்கா தளர்ந்துபோய் விட்டது?

ஈழத்துக்காக முத்துக்குமார் தொடர்ந்து 16 பேர் மடிந்தபோதும், அவர்கள் ஏன் இறந்தார்கள் என்கிற ஆராய்ச்சிதான் இங்கு நடந்ததே தவிர, ஆவேசம் எழவில்லை!

இனவெறிக் கொடூரன் ராஜபக்ஷ சிங்கள மக்களுக்கு உண்மையாக இருக்கிறான். அவனுக்கு சிங்கள மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், அவனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் என் அண்ணன் பிரபாகரன். அவருக்கு இந்தத் தமிழினம் ஒரு விழுக்காடுகூட உண்மையாக இல்லாமல் போய்விட்டது.

காரணம், சாதியையும் மதத்தையும் தாண்டியது இனம் என்பது தமிழகத்து தமிழர்களுக்கு இன்னமும் புரியவில்லை.
ராவுக்கு, ரெட்டியாருக்கு, நாயுடுவுக்கு என சாதியத்துக்காக ஆந்திராவில் கட்சி இல்லை. பெருமகனார் ராமராவ் கட்சி தொடங்கிய போதுகூட 'தெலுங்கு தேசம்என்றுதான் பெயர் வைத்தார். சகோதரர் சிரஞ்சீவியும் 'பிரஜா ராஜ்யம்என்றுதான் கட்சி தொடங்கினார். மும்பையில் வசிக்கும் மூன்று லட்சம் மலையாளிகள், 'மலையாள சமாஜம்அமைத்து அரசியல் சக்தியாக வாழ்கிறார்கள்.


ஆனால், அங்கே 20 லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கும் தமிழர்கள் நாடார், செட்டியார், பிள்ளைமார் என சாதி பெயரில் சங்கங்கள் வைத்துக் கூறுபட்டுக் கிடக்கிறார்கள். சங்கம் சங்கமாக பிரிந்து கிடக்கும் வரை நம்மை அங்கம் அங்கமாக வெட்டத்தானே செய்வார்கள்? தமிழனுக்குள் சாதி என்று இல்லாமல் சாதிக்குள் தமிழன் என்றாகிவிட்டதால்தானே இத்தனை துயரங்களும்... எது செத்தாலும் சாதி சாகக்கூடாது எனக் காத்தான் என் மூத்தோன். அதனால்தான் இன்றைக்கு இனத்தையே இழவுக்குக் கொடுத்துவிட்டுக் கதறிக் கிடக்கிறோம்.


ஈழத்துக்கு நான் போயிருந்த போதே இந்த ஆதங்கம் இருந்தது. ''உங்களுக்கு உண்மையாக இல்லாத தமிழர்களுக்காகப் போராடுகிறோமே என எப்போவாவது எண்ணி இருக்கிறீர்களா அண்ணா?'' என ஆதங்கத்தோடு கேட்டேன். சட்டெனப் பதறிப்போனவர், ''அப்படி சொல்லக்கூடாதுப்பா... நம்மளை நேசிக்கிறவங்க, எதிர்க்கிறவங்க எல்லாருக்கும் சேர்த்துதான் நாம நாடு அடையணும். அதுதான் நம்ம கடமை!'' என்றார்.

அரசியல் ரீதியா நீங்க எந்த முயற்சியும் எடுக்கலைன்னு சிலர் சொல்றாங்களே அண்ணே...'' எனத் தயங்கியபடியே கேட்டபோது, அமைதியாக என் முகம் பார்த்தார். ''நான் தண்ணிக்குள்ள நிற்கிறேன். என்னால நீந்தத்தானே முடியும். தரையில நிற்கிற நீங்கதானேப்பா ஓடணும். தண்ணிக்குள்ள இருக்கிற நானே நீந்தணும்... நானே ஓடணும்னு எதிர்பார்த்தால் எப்படிப்பா சரியா இருக்கும்? நமக்கான தேச விடுதலைக்கான போரை இந்த அண்ணன் செய்யலாம். அதுக்கான போராட்டத்தையும் அரசியலையும் புரட்சியையும் தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த எம்மக்களும் தானேப்பா செஞ்சிருக்கணும்?'' என்றார். என் முகத்தை ஆழமாக ஊடுருவியவராக, ''இந்த நாடு எனக்கானதா... நமக்கானது இல்லையாப்பா?'' எனக் கேட்டபோது அவருடைய முழு வலியும் புரிந்தது.

புலிகள் போர் செய்த அளவுக்கு அரசியல் செய்யவில்லை?'' என விமர்சனம் வைக்கும் அதிமேதாவிகளிடம் இதற்குப் பதில் இருக்கிறதா? அண்ணனின் கேள்வியையே அவர்களிடமும் வைக்கிறேன்... அவர் போர் செய்தபோது, நீங்கள் என்ன செய்தீர்கள்?

இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் நாம் எழுச்சி பெறாமல் இருப்பதற்குக் காரணம்... சாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வீதிக்குக் கொடுக்கத் தயங்கியதுதான். மதத்துக்கு கொடுத்த மரியாதையை தமிழ் இனத்துக்குக் கொடுக்க மறந்ததுதான்.

பிணமான பின்பும் ரணமாக்கப்பட்ட இசைப்பிரியா இந்தச் சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால், அதன் கொந்தளிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழச்சியாக மட்டுமே இருந்ததால்தான் அங்கே அவள் நாதியற்றுக் கிடந்தாள். அங்கே இடிக்கப்பட்ட என் பாட்டன் பண்டார வன்னியன், தாகத்தையும் ஆயுதமாக ஏந்திய அண்ணன் திலீபன் உள்ளிட்டவர்களின் சிலைகள் சாதியத் தலைவர்களின் சிலைகளாக இருந்திருந்தால், தமிழகமே குமுறிக் கொந்தளித்து இருக்கும்.

தமிழர்களுக்குத் தலைவர்களாய் வாய்த்தவர்கள் இனப் பற்று இற்றுப்போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டார்கள். ஒருவேளை இனப்பற்று இற்றுப்போவதுதான் தங்களின் பணப்பற்றுக்குப் பாதுகாப்பு என அவர்கள் எண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இயக்கங்களையோ, தலைவர்களையோ ஒருங்கிணைக்காமல், இனத்துக்காக எதையும் செய்யத் துணிந்த சிறு சிறு நெருப்புப் பொறிகளாக சிதறிக் கிடப்பவர்களை ஒருங்கிணைத்து பெருநெருப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். சாதி மறந்து, மதம் துறந்து, கட்சிப் பாகுபாடு களைந்து தமிழால் இணைந்து 'நாம் தமிழராகநிமிர்வதுதான் ஒரே வழி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் என்னை அடைத்திருந்தார்கள். 'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டாக்கிவிடக் கூடாதுஎன்பதற்காகவே வேட்பு மனு தேதி முடிந்த பிறகு வெளியே விட்டார்கள். வெறும் ஏழெட்டு நாட்கள்தான் பரப்புரையில் இறங்கினேன்.

இனத்தின் ரணத்தைத் துடைக்கத் துப்பற்றுக் கிடந்த இயலாமையை மனதில் ஏற்றி, காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தேன். அதற்கான பலனை நாங்கள் அடைந்தோமா என்பதைத் தோற்றுப்போன காங்கிரஸ் தலைவர்களின் துடிப்பே தமிழ் மக்களுக்கு உணர்ந்திருக்கும்!

அன்றைக்கு இருந்த ஆதங்கமும் அடிபட்ட வலியும் இன்றைக்கு ஆயிரம் மடங்கு அதிகமாய்ப் பெருகிப்போய்க் கிடக்கிறது. இப்போதும் ஐந்து மாதங்கள் சிறையில் கிடந்திருக்கிறேன். பசித்துப் பசித்து இரைக்காகக் காத்திருக்கும் புலியைப் போலவே வெளியே வந்திருக்கிறேன். என் இரை... இனத்தைப் பலிவாங்கிய காங்கிரஸ். இனத்தை அழித்த பழிகார காங்கிரஸையும், அதற்குத் துணைபோன தி.மு.க-வையும் எங்களின் இலட்சிய நெருப்பின் தகிப்பு, சூறையாடப்போகும் நாள் தூரத்தில் இல்லை!

ஏற்கெனவே, 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!என நான் சொன்னது சிலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க-தான் போட்டியிட்டது. அப்படியிருக்க, 'நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீங்க யாருக்கோ போடுங்க...என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

களத்தில் நிற்கும் காங்கிரஸ்தான் என் எதிரி. எதிரியைக் கொல்லக் கையில் கிடைப்பது களைகொத்தோ... மண்வெட்டியோ... எதுவாக இருந்தாலும் எடுத்து அடிப்பதுதானே சரியாக இருக்கும். அந்த நேரத்தில் என் கையில் கிடைத்தது இரட்டை இலை என்கிற ஆயுதம். அதனால்தான் அதை எடுத்து அடித்தேன். இலைக்கு வாக்குக் கேட்டதை வம்பாக மாற்றியவர்கள் பம்பரத்துக்கும், மாம்பழத்துக்கும், சுத்தியல் நட்சத்திரத்துக்கும் நான் ஓட்டுக் கேட்டதை நயமாக மறந்து விட்டார்கள்.

ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி, என்னைக் களங்கப்படுத்தி விடலாம் என நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... இந்தத் தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அ.தி.மு.க-வாக இருந்தால், இந்த சீமானின் குரல் இரட்டை இலைக்குத்தான் பரப்புரை செய்யும். இதை வைத்தே, 'அம்மையார் அள்ளிக் கொடுத்துவிட்டார்எனக் கிளப்பிவிடத் துடிக்கும் அரைகுறைகளே... உங்களுக்குச் சொல்கிறேன்...

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் இந்த சீமான் இருக்கப்போவது சிறைச்சாலையில்தான்!

தொடரும்..திருப்பி அடிப்பேன்!

Saturday, January 1, 2011

இலங்கையில் கூட்டுப் பயிற்சி ஏன்? சிங்களவனின் இனப்படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது! - திருப்பி அடிப்பேன் - சீமான் - பாகம் 06

இலங்கையில் கூட்டுப் பயிற்சி ஏன்? சிங்களவனின் இனப்படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது! - திருப்பி அடிப்பேன் - சீமான் - பாகம் 06
[ சனிக்கிழமை, 01 சனவரி 2011, 04:52.41 AM GMT +05:30 ]
இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... ''அண்ணா, முழங்கால் அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை.

மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு!''

என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே... இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம்.

ஈழத்தில் இழவு விழுந்தாலும், இராமேஸ்வரம் இரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்... மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், 'ஐயோ’ எனக் கதறினால், 'அனுப்புங்கள் போலீஸை...’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பயிற்சி அளிக்கும். இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்!’ என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க... அதை எதிர்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை.

எதற்கு அங்கே இந்திய இராணுவம்? மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா? எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்... சீனன் சுட்டான்... இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா? இல்லை, 'நீங்கள் சரியாகச் சுடுவதில்லை... நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும்!’ எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா?'' என காங்கிரஸ் அரசின் சட்டையை உலுக்கி கேள்வி கேட்க இங்கே ஆள் இல்லை.

கச்சத்தீவைச் சுற்றி சீன இராணுவம் இருப்பது ஏன்?’ எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், 'சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்’ என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே!

நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், 'சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும்!’ எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா? ஆற்காட்டார் இருக்கும் வரை 'இருண்ட பூமி’யாகத்தானே தமிழ்நாடு இருக்கும்?

குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில்? அதையும் மீறிப் பேசினால், இறையாண்மை அஸ்திரத்தை ஏவிவிடுகிறார்கள். எங்களைப்போல் இறையாண்மையைக் காக்கக் கூடியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா இந்த மண்ணில்? இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி...

சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா? இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன்பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா? மலையாள மீனவனைத் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பது சிங்களவனுக்குத் தெரியும். இந்திய அரசியலில் அதி முக்கிய சக்திகளாக இருக்கும் மலையாளிகள் சிங்களவனின் குடுமியை உலுக்கிவிடுவார்கள்.

ஆனால், எத்தனை தமிழர்கள் சிங்களவனால் சிதைக்கப் பட்டாலும், எங்கள் பிரதிநிதிகள் எதிர்த்துக் கேட்கப்போவது இல்லை. தியாகப் பெருந்தகை, அருட்பெருஞ்ஜோதி அன்னை சோனியா காந்தியின் முகம் சுண்டிவிடக் கூடாது என்பதுதான் இங்கு இருப்பவர்களின் முழு நேரக் கவலை.

இந்த தைரியத்தில்தான் தமிழர்களின் தலையில் கால் வைத்து விளையாடுவதில் அன்னை சோனியாவுக்கும் அறிவார்ந்த மன்மோகன் சிங்குக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

சிங்கள இராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியில் இறங்க இந்திய இராணுவம் செல்வது ஏன்? இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய இராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா? இல்லை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா? சிங்களவனின் இனப் படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது என்பது என் அழுத்தமான குற்றச்சாட்டு.

கொஞ்சம் இரத்தம் தாருங்கள்... நிறைய சுதந்திரம் தருகிறோம்’ என்றான் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 'நிறைய இரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் உலகத்திலே!’ என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள்.

புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா? 'என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது!’ என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என இப்போதும் கூட்டுப் பயிற்சிக்குப் படை அனுப்புகிறது.

பெருமதிப்புக்குரிய பிரதமர் அவர்களே...
காமன் வெல்த் மோசடி, அலைக்கற்றை அமளி துமளி என உங்களைச் சுற்றி இத்தனை களேபரங்கள் நடக்கையிலும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தவறாமல் செய்கிறீர்களே... சிங்களத்துக்கும் சீக்கியத்துக்கும் அப்படி என்ன அண்ணன் - தம்பி உறவு?

ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா ஐயா? பொழுதுபோகாத குறைக்கு 'புலிகள் கொல்லப் பார்க்கிறார்கள்’ எனக் கிளப்பிவிட்டுத் தாடியை நீவிக்கொள்ளவும் செய்கிறீர்கள். இதை எல்லாம் முன்கூட்டியே கண்டுபிடித்து உங்களை உஷார்படுத்திய உளவுத் துறை, மும்பையில் 25 தீவிரவாதிகள் நுழைந்து 150-க்கும் மேற்பட்டோரை சல்லடையாக்கியபோது எங்கே போய் உறங்கிக்கிடந்தது?

கார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே... இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே... ஊழல் செய்வது எப்படி? அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி? விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி? அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி? ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க... காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?!

அதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?

தங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.

சோனியாஜி... மன்மோகன்ஜி... 2ஜி... 3ஜி... அடச்சீ!
திருப்பி அடிப்பேன் தொடரும்...

எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது! அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது.. - சீமான் - பாகம் 05


எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது! அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது.. - சீமான் - பாகம் 05
[ புதன்கிழமை, 29 டிசெம்பர் 2010, 07:33.27 AM GMT +05:30 ]
சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்... இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும், ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!
முதன் முறையாக எம்.ஜி.ஆர். குறித்து முழங்கினேன். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எம்.ஜி.ஆர். எப்படி எல்லாம் பரப்பினார் என்பதை விளக்கிவிட்டு, நான் வீட்டுக்கு வருவதற்குள் எக்கச்சக்க விமர்சனங்கள்... ''எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சீமான் எப்படிச் சொல்லலாம்? பெரியாரும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்காக இருக்கும் கூட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் சீமான்!'' என்கிற வாதங்கள் ஒரு பக்கம். ''எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போதே தெரிகிறது... வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத்தான் சீமான் செயல்படப்போகிறார்!'' என்கிற அனுமானங்கள் ஒரு பக்கம்.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. 'அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை’ என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.

எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது. நம் உணர்வுகளையும் உரிமைகளையும் மனமார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி!'' - அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது குற்றறிவுகொண்டவனாக நான் குறுகிப்போய் நின்றேன். 'எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி!’ என தி.மு.க. தலைவர்கள் திரும்பத் திரும்ப சொன்ன வாதங்களை நிஜம் என நம்பி, என் மூளை பழுதடைந்திருந்த நேரத்தில், அண்ணன் சொன்ன வார்த்தைகள் என் சொரணையில் சூடு போட்டன.

தலைவர் பிரபாகரனுடன் மூன்று மணி நேரம் பேசினால், அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

இந்திய அமைதிப் படையை நம்பி நாம் ஆயுதங்களை ஒப்படைத்த நேரம்... நம் ஆயுதங்களை வாங்கிப் போட்டிக் குழுக்களுக்கு கொடுத்து, நமக்கு எதிரான போரைத் தூண்டிவிட்டது இந்திய அமைதிப் படை. மொத்தமாக 600 போராளிகள் மட்டுமே அப்போது இருந்தார்கள். 100 பேர்கொண்ட குழுக்களாகப் போராளிகளைப் பிரித்து அனுப்பிவிட்டு, நான் களத்தில் நிற்கிறேன். எந்தக் கணத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. 'பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி அவர் தப்பிப்பது கனவிலும் சாத்தியம் இல்லை!’ என இந்திய அமைதிப் படை கொக்கரிக்கிறது. எது குறித்து சிந்திப்பதற்கும் கணமற்ற வேளையில் தம்பி கிட்டு ஒரு பெட்டியில் பணத்தோடு வந்தார். மொத்தமாக 36 லட்ச ரூபாய். 'தம்பி கஷ்டப்படுவார்... இதை நான் கொடுத்ததாகச் சொல்லி அவரிடம் கொடு. எதுவும் நடக்காது. தம்பியை தைரியமாக இருக்கச் சொல்!’ எனச் சொல்லி, எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பிய பணம் என்றார் கிட்டு.

 நிஜமாகவே என்னைத் தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர்.!'' - அண்ணன் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இந்திய அமைதிப் படை அண்ணனை அழித்தொழிக்க நினைத்த வேளையிலும், தேசியக் குற்றம் எனத் தெரிந்தும் அண்ணனுக்கு எம்.ஜி.ஆர். உதவத் துணிந்தது என் நெஞ்சத்துத் தசைகளை எல்லாம் துள்ளத் துடிக்கவைத்தன.

ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர். கேட்க, '100 கோடி ரூபாய் தேவைப்படும்!’ என அண்ணன் சொன்ன உடனேயே, நான் தர்றேன்... நான் தர்றேன்... நீ நல்லா சண்டை பிடி!’ என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்... வேறு எவரைப்பற்றி ஐயா பேசுவது?

வாய் முழுக்க தமிழ் தமிழ் என முழங்கிவிட்டு, தமிழருக்கே வாய்க்கரிசி போட்டவரைப் பற்றியா பேசச் சொல்கிறீர்கள்? எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் எனச் சொல்வது பலருக்கும் பொறுக்கவில்லை. அன்னைத் தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உலகத்தின் எந்தப் புரட்சியாளனுக்கும் குறைவு இல்லாத புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் போராட்டத்துக்குத் தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சொல்லாமல், வேறு எவரைச் சொல்வதாம்?

அரசியல் இராஜதந்திரியாக இன்றைக்கு அரியணையில் அமர்ந்து இருப்பவரிடம் கேட்கிறேன்... ஈழப்போர் தீவிரம் எடுத்த வேளையிலும், மத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்காமல், கூட்டணியைக் கெட்டியாகப் பிடித்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வென்ற உங்களை அரசியல் சாணக்கியராகப் புகழாரம் பாடுகிறார்களே... எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை, ஏனய்யா உங்களின் சாணக்கியத்தனம் எடுபடவில்லை?
எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வந்த ஜெயலலிதாவையே 10 வருடங்கள் அரியணையில் உட்காரவைத்ததுதானே உங்கள் அரசியல் இராஜதந்திரத்தின் மகிமை?

அரைக்கால் சட்டையோடு உங்களின் கூட்டத்தை ஓடியோடி வந்து ரசித்தவன் - உங்களின் சாலச் சிறந்த தமிழுக்குக் கை தட்டியவன் - காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் ஈர்ப்பால் உங்களின் தடம் ரசித்து, உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவன், இன்று உங்களைக் கேட்கிறேன்...

ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என நினைத்து, அமைதிப் படை துவம்சம் செய்த வேளையிலும் அண்ணன் பிரபாகரனுக்கு அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர். எங்கே... எத்தனை பேர் இறந்தாலும் சரி... 'இருக்கை பத்திரம்’ என நினைத்து இரு கைகளையும் விரித்துக் காட்டிய நீங்கள் எங்கே?

பெரியாரின் பேரன் எம்.ஜி.ஆருக்கு வால் பிடிக்கிறானே...’ என உங்கள் தரப்பு வசவாளர்கள் கேலி பேசுவார்கள். பகுத்தறிவுப் பகலவனின் நிஜ வாரிசாக வரித்துக்கொண்ட உங்களைப் பார்த்து அவர்கள் வாய் திறக்காத அதிசயம்தான் எனக்குப் புரியவில்லை. மஞ்சள் துண்டு கேள்விக்கு இதுவரை நீங்கள் நெஞ்சம் திறந்து பதில் சொல்லவே இல்லை, ஐயா... இராஜராஜன் கட்டிய திருவுடையார் கோயிலுக்குள் போகும்போது மட்டும் மஞ்சள் துண்டைக் கழற்றிவிட்டு, பட்டாடை உடுத்திய இரகசியம் என்ன ஐயா? புட்டபர்த்தி சாய்பாபா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, தாயார் தயாளு அம்மாள் நடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாரே... உங்கள் வீட்டில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அன்று மட்டும் பரணில் தூக்கிப்போட்டு விட்டீர்களா? மாய மந்திரத்தால் தங்க மோதிரம் வரவழைத்துக் கொடுத்த சாய்பாபாவை உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து, வேண்டிய தங்கத்தை பெற்று இருக்கலாமே... புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டி முடிக்காதபோதே எந்த ஜோசியக்காரன் சொல்லி ஐயா அவசரமாகத் திறந்தீர்கள்?

வெண்தாடிக் கிழவனின் பேரனாகச் சொல்கிறேன்... ஐயா! நீங்கள் செய்த துரோகத்துக்கு, இந்தத் தமிழினம் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, கண்கூடாகப் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி’ என்று எத்தனையோ முறை இனத்தால் அவரைத் தமிழனிடம் இருந்து பிரிக்கப் பார்த்தீர்கள். உண்மையில், மலையாள எம்.கே.நாராயணனுக்கும், கன்னடத்து எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் கை கொடுத்து ஈழத்தைக் கருவறுக்கத் துணைபோனது யார்?

துக்கமும் தோற்றுப்போன வெட்கமுமாகத் துடிக்கும் தமிழர்களுக்குத் தெரியும்... யார் மலையாளி என்பதும், யார் கொலையாளி என்பதும்!
திருப்பி அடிப்பேன்.....,